Brain Rot - உங்கள் குழுந்தையின் மனநிலை குறித்து
எச்சரிக்கையாயிருங்கள்!

📅 August 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read


நீதிமொழிகள் 22:6

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

இன்றைய நவீன காலத்தில், தாய் மற்றும் தகப்பன் இருவருமே வேலைக்குச் செல்லும் கலாச்சாரத்தை நம்மால் எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. அப்பா மற்றும் அம்மா இருவரும் தங்களுடைய வேலையின் முக்கியத்துவம் மற்றும் அவசரத்தினால் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கின்றனர். இவ்வளவு பரபரப்பான வாழ்க்கையும், கடினமான உழைப்பும் எதற்காக என்று கேட்டால், “எல்லாம் என் பிள்ளைகளுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் தான்” எனப் பெருமையாகப் பேசுவதை நம்மால் பார்க்க முடிகிறது அல்லவா!

ஆனால், பிள்ளைகளுக்காக எனக் கூறி, இன்று பிள்ளைகளின் வளர்ச்சியைக் கவனிக்காமல் இருந்து, பிள்ளைகள் வளர்ந்து திடனற்று போன பின்பு வருந்துவதில் பிரயோஜனம் ஒன்றுமில்லை. (கொலோ. 3:21)

இன்றைய பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகள் தங்களைத் தொந்தரவு செய்யாமல் இருக்க, அவர்களின் கையில் போனை (Phone) கொடுத்துவிட்டு, “இனி என்னைத் தொந்தரவு செய்யாதே” எனக் கூறி, பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை போனிடம் (Phone) கொடுத்துவிடுகின்றனர். (நீதி. 13:24)

குழந்தைகள் தங்கள் போனில் (Phone) இருக்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் தாக்கத்தினாலேயே வளருகின்றனர். (நீதி. 22:6) இதனால், மூளைச் சிதைவு (Brain Rot) என்னும் பிரச்சினையைப் பிள்ளைகள் எதிர்கொள்கின்றனர்.

1. மூளை சிதைவு என்பது என்ன?

Brain rot' (பிரெயின் ராட்) என்பதற்குத் தமிழில் மூளை அழுகல் அல்லது மூளை மழுங்கல் என்று பொருள். இணையத்தில் அல்லது சமூக வலைத்தளங்களில் (இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்றவை) குறைந்த தரமான, பயனற்ற தகவல்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதால், மூளை தனது தெளிவாகச் சிந்திக்கும் திறனை இழக்கும் நிலையைக் இது குறிக்கிறது.

2. முக்கிய பாதிப்புகள்:

  1. கவனக் குறைவு: எதிலுமே நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமல் போவது.
  2. சிந்தனை மழுங்கல்: ஆழமாக யோசிக்கும் திறன் குறைந்து, மூளை சோர்வடைவது.
  3. உற்சாகமின்மை: குறுகிய காணொளிகளின் தொடர்ச்சியான தூண்டுதலுடன் ஒப்பிடும்போது, சாதாரண செயல்பாடுகள் சலிப்பை ஏற்படுத்தலாம்.
  4. நினைவாற்றல் மற்றும் கற்றல் சிரமங்கள்: சிறிய தகவல்களுக்கு இடையில் தொடர்ந்து மாறுவது, நீடித்த கற்றலைக் கடினமாக்கும்.
  5. நிஜ உலக ஈடுபாடு குறைதல்: திரையில் அதிக நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வதற்கும், சமூகமயமாவதற்கும், புதியனவற்றை உருவாக்குவதற்கும் அல்லது அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுவதற்கும் செலவிடும் நேரத்தைக் குறைத்துவிடும்.

3. பிள்ளை வளர்ப்பை குறித்து
தேவன் அக்கரை கொண்டியிருக்கிறார்.
( 1 தீமோ 3:4; 1 தீமோ 5:10; எபே 6:4)

பிள்ளைகளை வளர்க்கின்ற காரியத்தில் தேவன் மிகவும் கவனமுடையவராய் இருக்கிறார். தேவன் ஆபிரகாம் தன்னுடைய மகனாகிய ஈசாக்கை எவ்வாறு வளர்ப்பான் என்பதை கவனித்தார். (ஆதி. 18:19; எபி. 11:9-13)

இஸ்ரவேலர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் தேவனுடைய காரியங்களையும், அவருடைய நீதிநியாயங்களையும் சொல்லி வளர்க்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தார்கள். (யாத். 12:26-27; உபா. 6:5-8) தேவபக்தியுள்ள யூதர்கள், தேவன் தங்களுடைய வாழ்க்கையில் செய்த காரியங்களைத் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கூறி, அவர்களை விசுவாசமுள்ளவர்களாக வளர்த்தார்கள். (சங்கீதம் 78:3-8)

புதிய ஏற்பாட்டிலும், பிள்ளைகளை தேவபக்தியுடன் வளர்ப்பதைக் குறித்து கட்டளைகளை நாம் பெற்றிருக்கிறோம். (1 தீமோ. 3:4; 1 தீமோ. 5:10; எபே. 6:4) பவுல் தன்னுடைய குமாரனைப் போல் வளர்த்தெடுத்த தீமோத்தேயுவுக்கு, தேவன் அவருக்குச் செய்த எல்லாவற்றையும் கூறியதோடு, அவரை தேவபக்தியுள்ளவனாக வளர்த்தெடுத்தார். (2 தீமோ. 3:10-13)

4. பிள்ளைகள் வளர கூடாது,
அவர்கள் வளர்க்கப்பட வேண்டும்
(எபே 6:4, நீதி 22:6)

பிள்ளைகள் இந்த உலகத்தைப் பார்த்தும், சமூக வலைதளங்கள் கற்றுக்கொடுக்கும் அர்த்தமில்லாத காரியங்களைப் பார்த்தும், தங்களுக்கான நீதி நியாயங்களை வகுத்துக்கொண்டு வளராமல், தேவனுடைய நீதியையும், அவருக்குப் பிரியமானது எது என்பதையும் அறிந்து வளர்க்கப்பட வேண்டும். (கொலோ. 1:9-10; 2 தீமோ. 3:16-17)

5. இந்த பிரட்சனைக்கான தீர்வு:

  1. டிஜிட்டல் கட்டுப்பாடுகள்: Instagram, TikTok அல்லது YouTube போன்ற செயலிகளின் பயன்பாட்டை ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்களாகக் கட்டுப்படுத்த, தொலைபேசியில் உள்ள உள்ளமைக்கப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்தவும்.
  2. கவனத் திறனை மேம்படுத்தல்: சபையில் இருக்கும் அல்லது வீட்டில் இருக்கும் முதியவர்களுடன் பேச்சுத் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலமாக, அவர்களிடம் இருந்து கதைகளைக் கேட்கும் திறனைப் பிள்ளைகளுக்கு அதிகரிக்கச் செய்தல். (1 தீமோ. 5:10; தீத்து 2:3-5)
  3. படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளை ஊக்குவியுங்கள்: வரைதல், உருவாக்குதல், எழுதுதல், கைவினைப் பொருட்கள் மற்றும் விளையாடுதல் போன்ற செயல்பாடுகளில் பிள்ளைகளை ஈடுபடுத்துங்கள்.
  4. அவர்களுடன் நேரம் செலவிடுங்கள்: உண்மையான உரையாடல்கள் தகவல் தொடர்பு மற்றும் சிந்தனைத் திறன்களை வளர்க்க உதவுகின்றன.
  5. வேதாகம ஆர்வத்தை தூண்டுதல்: வேதாகம காரியங்களை பிள்ளைகளிடம் பேசுதல், அவர்களின் கேள்வி கேட்கும் ஆர்வத்தை தூண்டுதல், அவர்களை தேவனுடன் இனைந்து வாழும் படி அவர்களை ஊக்குவித்தல், தேவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தல்.

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →