“பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை இன்றும் நாங்கள் பெறுகிறோம்” என்றும், அதையே “பரிசுத்த ஆவியின் அபிஷேகம்”, “அக்கினி அபிஷேகம்” என்றும் கூறி, ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு கன்வென்ஷன் போன்ற கூட்டங்களிலும் நாங்கள் அதைப் பெறுகிறோம் என்று கூறி, தாங்களும் ஏமாந்து மற்றவர்களையும் ஏமாற்றுகிற அவலநிலை இன்று காணப்படுகிறது.
புதிய ஏற்பாடு இதைப் பற்றி என்ன பேசுகிறது? இவ்வாறு கூறுவது உண்மையா? என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். மேலும், கொர்நேலியுவின் வீட்டாருக்கு “பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம்” அருளப்பட்டதால் (அப்போஸ்தலர் 10), அதே அனுபவத்தை இன்றும் ஏன் பெற முடியாது என்று சிலர் யோசிக்கிறார்கள்.
ஆனால், ஆவியின் “ஞானஸ்நானம்” என்பது முதல் நூற்றாண்டுக்கு மட்டுமே உரித்தான ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
"பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்"
1. பரிசுத்த ஆவியானவர் எல்லா
மனிதர்களும் வாக்களிக்கப்பட்டார்
இதை அப்போஸ்தலனாகிய பேதுரு தனது பிரசங்கங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். யூதராயினும் புறஜாதியினராயினும், இந்த வாக்குத்தத்தம் எல்லாருக்குமானது (அப்போஸ்தலர் 2:39; அப்போஸ்தலர் 11:17–18).
அப்போஸ்தலனாகிய பவுல் கூறும்போது, பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களுக்குள் வாசம்பண்ணுவதாகக் கூறுகிறார் (ரோமர் 5:5; ரோமர் 8:26; 2 தீமோத்தேயு 1:14; 1 கொரிந்தியர் 6:19).மேலும், அப்போஸ்தலர் 5:32-இல், தேவனுக்குக் கீழ்ப்படிகிற யாவருக்கும் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
2. புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர்
வெவ்வெறு முறைகளில் கொடுக்கப்பட்டார்
புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவர் மூன்று முறைகளில் அருளப்பட்டார். முதலாவதாக, பரிசுத்த ஆவியானவர் நேரடியாக அருளப்பட்டார் (அப்போஸ்தலர் 2). இது அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் (அப்போஸ்தலர் 1:4–13).
இரண்டாவதாக, அப்போஸ்தலர்கள் தங்களுடைய கைகளை யார் மீது வைக்கிறார்களோ, அவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார் (அப்போஸ்தலர் 8:15–18; அப்போஸ்தலர் 19:1–9). ஆனால், அப்போஸ்தலர்களின் கைகளினால் பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள், தங்களுடைய கைகளை மற்றவர்கள்மீது வைப்பதன் மூலம் அதைப் பிறருக்குக் கொடுக்க முடியவில்லை (அப்போஸ்தலர் 8:1–24).. ஆனால் இந்த கைகளை வைக்கப்பட்டு பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் ஏற்கனவே தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றவர்களாய் இருந்தார்கள்.
மூன்றாவதாக, ஒருவர் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போது பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 2:38; அப்போஸ்தலர் 5:32; எபேசியர் 1:13). இன்று எல்லா நபர்களும் இப்படியாக தான் பரிசுத்த ஆவியை பெறுகிறோம்.
3. அப்போஸ்தலர்கள் ஏன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றார்கள்?
பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றதற்கான நோக்கம் தனித்துவமானதாக இருந்தது. இது குறித்த பின்னணி விவரங்கள் யோவான் எழுதிய சுவிசேஷ புத்தகத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. சுவிசேஷத்தை சரியாக தவறின்றிப் போதிப்பதில் தங்களை வழிநடத்த, பரிசுத்த ஆவியின் வல்லமையை பெறுவார்கள் என்று கர்த்தர் தம் அப்போஸ்தலர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
இரட்சகரிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்ட காரியங்களை அந்த பரிசுத்த ஆவி அவர்களுக்கு நினைபூட்டி (யோவான் 14:26), அவர்களைச் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தி, வரப்போகிற காரியங்களை அவர்களுக்கு அறிவிப்பார் (யோவான் 16:13). முன்கூட்டியே தனிப்பட்ட முறையில் ஆயத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏதுமின்றி, அவருடைய செய்தியை அவர்களால் அறிவிக்க முடியும் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார். மாறாக, சுவிசேஷத்தின் சத்தியமானது தேவைப்படும் தருணங்களில் அவர்களுக்கு "அளிக்கப்படும்". பார்க்கவும் எபேசியர் 3:5,6 (மத்தேயு 10:19-20; லூக்கா 21:14-ஐயும் பார்க்கவும்).
இன்று முதல் நூற்றாண்டு காலத்தில் இருந்த அப்போஸ்தலர்கள் போல, அவர்களுக்கு பின்பு சபையில் அப்போஸ்தலர்கள் (எபேசியர் 2:19-21) யாரும் இல்லை. சுவிசேஷத்தின் செய்தியானது புதிய ஏற்பாட்டின் பரிசுத்த வேதவசனங்களில் அடங்கியுள்ளது.(எபே 3:3-7). நமக்கு தேவனையான எல்லா செய்திகளையும், பரிசுத்த ஆவியானால் வேத வசனங்களாய் புதிய ஏற்பாடு கொண்டிருப்பதினால் (2 பேதுரு 1:1-3). இன்று அப்போஸ்தலர்களை போல பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற அவசியமில்லை. (மத்தேயு 19:28; 1 கொரிந்தியர் 13:8 மற்றும் அதற்கடுத்த வசனங்கள்; எபேசியர் 2:20 ஆகியவற்றைப் பார்க்கவும்). எனவே, கர்த்தருடைய அப்போஸ்தலர்கள் பெற்றதைப் போன்ற பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை இன்று மீண்டும் பெற வேண்டிய அவசியம் இல்லை.
4. கொர்நேலியுவிம் அவன் வீட்டாரும் ஏன்
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றார்கள்?
கொர்நேலியுவின் வீட்டில் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், அந்நிய பாஷைகளில் பேசுதல் எனும் வெளிப்பாடு ஒன்றாக இருந்தபோதிலும், அப்போஸ்தலர்கள் பெற்ற ஞானஸ்நானத்திலிருந்து வடிவமைப்பில் வேறுபட்டிருந்தது.
கொர்நேலியுவிக்குக அப்போஸ்தலர்களுக்கு இணையான போதிக்கும் வல்லமைகள் இருந்தன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நிச்சயமாக, ஒரு அப்போஸ்தலனைப் போல அந்த நூற்றுக்கதிபதியால் மற்றவர்கள் மீது கைகளை வைத்து அவர்களுக்கு ஆவிக்குரிய வரங்களை அளிக்க முடியும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை (காண்க அப்போஸ்தலர் 8:18; 19:6; 2 தீமோத்தேயு 1:6).
கொர்நேலியுவிக்கு பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் அருளப்பட்டதன் நோக்கம், புறஜாதியாருக்கு சுவிசேஷத்தை அளிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார் என்பதை யூதர்களுக்கு நிரூபிப்பதே ஆகும் (அப் 11:16-18) — இந்தச் சூழ்நிலை எபிரேயர்களின் சிந்தனையில் ஒரு சிக்கலாக அமைந்தது.
புறஜாதியார் கிறிஸ்தவர்களாக மாற முடியும் என்ற எண்ணத்தை பேதுரு கூட ஆரம்பத்தில் எதிர்த்ததும் (அப்போஸ்தலர் 10:14 முதல்), எருசலேமின் யூதர்கள் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது எதிர்த்ததும் (அப்போஸ்தலர் 11:2-3) இதற்குச் சான்றாகும். கொர்நேலியு மற்றும் அவருடைய வீட்டார் மீது ஆவியானவர் காட்டிய அற்புதமே நிலைமையை மாற்றியது (காண்க: அப்போஸ்தலர் 11:4; 15:7). புறஜாதியார் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான இந்த தெய்வீக சான்றின் விளைவு, இந்நாள் வரை அப்படியே நீடிக்கிறது. அதன்படி, அதே நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, ஆவியானவரின் நவீன, இயற்கைக்கு அப்பாற்பட்ட பொழிதல் தேவையில்லை.
5. முடிவுரை
ஆரம்பகால அப்போஸ்தலர்களுக்கும், மற்றும் புறஜாதியினருக்கும் அருளப்பட்ட அந்த அனுபவத்தின் நோக்கத்தை, இன்று பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக வாதிடுபவர்கள் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இன்றைய காலத்தில் ஒருவரின் இரட்சிப்பிற்குப் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் அவசியமானதல்ல; அது இரட்சிப்பிற்கான ஒரு அடையாளமும் அல்ல. அது முதலாம் நூற்றாண்டில், அந்தச் சூழலுக்கு மட்டுமே உரித்தான ஒரு நிகழ்வாக இருந்தது.