வேத வசனங்களை சரியாக புரிந்துக்கொள்வது எப்படி?

அப்போஸ்தலர் 16:11

📅 July 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read

இன்று அநேக தவறான உபதேசங்களும், பாரம்பரியமும் அதிகமாய் இருப்பதற்கு என்ன காரணமாய் இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒருவேளை அநேக காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் முதன்மையான காரணம் “தேவனுடைய வார்த்தையை சரியாக கற்றுக்கொள்ளாமல் இருப்பது தான்”. இதை பேதுருவும் தன்னுடைய நிருபங்களில் நமக்கு தெளிவுப்படுத்துகிறார்.(2 பேதுரு 2:12; 2 பேதுரு 3:16). தேவனுடைய வார்த்தைகளை சரியாக புரிந்துக்கொள்ளாத நபர், அந்த வார்த்தைகளை மற்றவர்களுக்கு போதிக்கும் போது, அவரும் தவறான பாதையில் போவதோடு! தன்னை நம்பி தனக்கு பின்பாக வரும் நபர்களையும் தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார். எனவே தேவனுடைய வார்த்தையை சரியாக புரிந்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்த்ததாக இருக்கிறது. ஆனால் எப்படி வேத வசனங்களை சரியாக புரிந்துக்கொள்வது.இதற்கு வேத வசனங்களை படிக்கும் போது, ஒரு ஏழு கேள்விகளை கேட்க வேண்டும். இந்த கேள்விகளை ஒருவர் தனக்கு தானே கேட்டு புரிந்துக்கொள்ளும் போது தேவ வசனத்தின் உண்மையை புரிந்துக்கொள்ள முடியும்.

1. யார் பேசுவது?

இந்த கேள்வியை தான் ஒருவர் முதலில் கேட்க வேண்டும், இப்பொழுது நீங்கள் ஒரு வசனப்பகுதியை படிக்கிறீர்கள் என்றால் அந்த வசனப்பகுதியில் யார் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு மத்தேயு 16:18 -யில் யார் பேசிக்கொண்டு இருக்கிறார் என்பதை யோசித்து பார்க்க வேண்டும். அங்கே இயேசு கிறிஸ்து பேசிக்கொண்டு இருக்கிறார்.

மத்தேயு 16:18

"நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" .

2. யாரிடம் பேசுவது?

அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது, பேசுபவர் யாரிடம் பேசுகிறார் என பார்க்க வேண்டும். மத்தேயு 16:18-யில் இயேசு யாரிடம் பேசுகிறார்? அவர் நம்முடன் பேசவில்லை. அவர் பேதுருவிடம் பேசுகிறார். பல வேளைகளில் வேத வசனத்தை படிக்கும் நபர், படிக்கும் வேத பகுதி தனக்காக சொல்லப்பட்டதாக எடுத்துக்கொள்வது தேவனுடைய வார்த்தையை தவறாக புரிந்துக்கொள்வதற்கான காரணமாக இருக்கிறது.

3. நேரடியாக பேசப்படுகிறதா?

தேவனுடைய வார்த்தை படிக்கும் போது, அடுத்தது நாம் கேட்க வேண்டிய கேள்வி, அந்த வார்த்தை நேரடியான பொருளில் பேசப்படுகிறதா? என்பதை தான். சில வேத பகுதிகள் நேரடியான அர்த்தமில்லாமல் உவமைகளினாலும், உருவகத்தினாலும் இருக்கும் என்பதினால் நம் இதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

4. உவமையாக பேசப்படுகிறதா?

மத்தேயு 16:18 – யில் இயேசு பேதுருவிடம் பேசும் போது அவர் நேரடியாக பேசினார். அதன் பொருள் நேரடியாக இருந்தது. ஆனால் சில வேத வார்த்தைகள் கவிதைகளினாலும், உருவகத்தினால் சொல்லப்படும். அந்த வசனப்பகுதிகளை நேரடியாக எடுத்துக்கொள்ள கூடாது. (பிர 11:1,4; மத் 23:27; மத் 15:14,15; மத் 19:24) இதைப்போன்ற வசனங்களை நாம் உதாரணமாக நாம் பார்க்கலாம்.

5. பேசப்படும் சூழ்நிலை என்ன?

மிகவும் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நாம் படித்துக்கொண்டு இருக்கும் வேதப்பகுதியானது எந்த சூழ்நிலையில் பேசப்படுகிறது என்பதை. மத்தேயு 16:18 – யின் பொருளை நாம் புரிந்துக்கொள்ள நாம் அந்த வசனப்பகுதியின் முன்னும் பின்னும் நாம் படிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் தவறாக புரிந்துக்கொள்ள அநேக வாய்ப்பு இருக்கிறது.

6. மைய கருத்து என்ன?

மத்தேயு 16:18 -யின் சூழ்நிலைகளை தெரிந்த பின்பு நாம் அந்த வசனப்பகுதியின் மைய கருத்தை அறிய முடியும். கிறிஸ்துவாகிய இயேசு தன்னுடைய சபையை கட்டுவதாக பேதுருவிடம் வாக்கு செய்ததையும், அந்த சபையானது நித்தியமானது என்பதையும், நாம் புரிந்துக்கொள்ள முடியும். சபை என்பதே மைய கருத்தாக இருக்கிறது.

7. நமக்கான பாடம் என்ன?

இறுதியாக நாம் கேட்க வேண்டிய கேள்வி, நான் படித்த இந்த வேத வசனங்கள் எனக்கு என்ன பாடத்தை தருகிறது, அதாவது நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தான். மத்தேயு 16:18 -யில் படிக்கிற வசனத்தின் மூலம் நமக்கான பாடம், இயேசுவால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துவின் சபையில் நான் கட்டப்பட்டவனாய் இருக்க வேண்டும். அதற்கு தான் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிய வேண்டும், என்னுடைய இரட்சிப்பை காத்துக்கொள்ள வேண்டும்.

நிறைவாக:

இந்த கேள்விகளை நாம் நமக்கு நாமே கேட்டு வேதவார்த்தைகளை படிப்பதினால் நம்மால் வேத வார்த்தைகளை சரியாக புரிந்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் சத்தியத்தை அறியும் அறிவை அடைவது தான் தேவனுடைய சித்தமாய் இருக்கிறது. ( 1 தீமோ 2:4)

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →