தண்ணீரா? கீழ்ப்படிதலா?
ஒருவர் இரட்சிக்கப்பட தண்ணீர் ஞானஸ்நானமே முக்கியம்

(மாற்கு 16:15,16)

📅 August 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read


இரட்சிப்பு என்பது கிறிஸ்துவத்தில் மிகவும் முக்கியமான அடிப்படையான வார்த்தையாகும். கிறிஸ்து இயேசு இந்த பூமிக்கு வந்ததின் நோக்கமே எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்கே (லூக்கா 19:10), இந்த இரட்சிப்பை தருவதற்கே கிறிஸ்து தன்னுடைய ஜீவனை கொடுத்தார். (1 பேதுரு 1:18-20). ஆனால் இந்த இரட்சிப்பை குறித்த விஷயங்களில் நிறைய தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட காரியங்களும், தவறாக போதிக்கப்பட்ட கள்ள உபதேசமும் இருக்கின்றன.

புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழும் நாம், ஒரு மனிதன் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டு்ம்? என்பதை குறித்து புதிய ஏற்பாடு என்ன கூறுகிறது என்று பார்க்க போகிறோம்.

மாற்கு 16:15,16

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்

1. இரட்சிப்பு என்றால் என்ன?

இரட்சிப்பு என்ற வார்த்தையின் அர்த்தமே காப்பாற்றப்படுதல் மற்றும் மீட்கப்படுதல் என்பதாகும். இது பாவத்திலிருந்தும் பாவத்தின் விளைவுகளிலிருந்தும் காப்பாற்றப்படுவதையும் மீட்கப்படுவதையும் குறிக்கிறது (யோவான் 8:24; ரோமர் 6:17–23; எபேசியர் 2:1–8).

பாவம் செய்த எந்த மனிதனும் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை (எபேசியர் 2:8–9; தீத்து 3:4–5). ஒரு மனிதன் பாவத்திலிருந்து மீட்கப்படவில்லை, அதாவது இரட்சிக்கப்படவில்லை என்றால், அவர் நரகம் என்னும் ஆக்கினையை நோக்கிச் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் (2 பேதுரு 1:4; 2 தெசலோனிக்கேயர் 1:7–8).

தேவன் ஒரு மனிதனின் பாவங்களை மன்னிக்கும்போது, அவன் பாவத்திலிருந்து மீட்கப்படுகிறான். இதுவே இரட்சிப்பின் ஒரு முக்கியமான அம்சமாகும் (எபேசியர் 1:7).

2. கிறிஸ்துவின் இரத்ததினாலே இரட்சிப்பு கிடைக்கிறது?

இரட்சிப்பு என்பது மனிதர்களின் எந்தவொரு சரீர முயற்சியினாலும் கிடைப்பதில்லை என்பதை புதிய ஏற்பாடு தெளிவாகக் கூறுகிறது (தீத்து 3:5; 1 பேதுரு 1:18). நம்முடைய இரட்சிப்பு கிறிஸ்துவின் தியாகத்தினாலும், அவருடைய இரத்தத்தினாலும் நமக்குக் கிடைக்கிறது (1 பேதுரு 1:19; எபிரெயர் 9:12–14).

எபேசியர் 1:7-ல், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது என்று நாம் வாசிக்கிறோம். இந்த இரட்சிப்பு மனிதனுடைய கிரியைகளினால் அல்ல, கிறிஸ்துவின் கிருபையினாலே கிடைக்கிறது (எபேசியர் 2:5).

3. இரட்சிக்கப்பட ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்?

இந்த கேள்வியானது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒரு மனிதனை இரட்சிப்பதற்காக, தேவன் எல்லாவற்றை செய்துவிட்டு, அதற்கான வாய்ப்பை மனிதர்களாகிய நமக்கு கொடுத்திருக்கிறார். தேவன் கொடுத்திருக்கும் வாய்ப்பே சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிவது தான் . ஒரு மனிதன் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படியும் போதே அவன் இரட்சிக்கப்படுகிறான். (மாற்கு 16:15,16; ரோமர் 1:16,17, 1 கொரிந்தியர் 15:1,2).

4. ஞானஸ்நானம் என்பது கீழ்படிதல், அது பாரம்பரியம் அல்ல!

இரட்சிப்பு என்பது வெறும் சுவிசேஷத்தை விசுவாசிப்பதினால் மாத்திரம் வருவதில்லை. புதிய ஏற்பாட்டில் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டவர்கள், அதைக் கேட்டு விசுவாசித்து, மனந்திரும்பி, தங்களுடைய விசுவாசத்தை அறிக்கையிட்டு, தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர் (அப்போஸ்தலர் 8:35–39; அப்போஸ்தலர் 16:14–15; அப்போஸ்தலர் 16:30–34). ஒருவர், “நான் இயேசுவை விசுவாசிக்கிறேன்; அதை நான் அறிக்கையிடுவேன். ஆனால், தண்ணீரில் முழ்கி ஞானஸ்நானம் பெற மாட்டேன்” என்று கூறினால், அவர் தேவன் கொடுத்துள்ள கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார். எனவே, புதிய ஏற்பாட்டின் போதனையின்படி, விசுவாசம், மனந்திரும்புதல், அறிக்கையிடுதல் மற்றும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெறுதல் என்பதே அவருக்கு இரட்சிப்பை கொடுக்கிறது. (மாற்கு 16:15–16; 1 பேதுரு 3:21; தீத்து 3:5; எபேசியர் 5:26). ஞானஸ்நானம் என்பது தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதை காண்பிக்கிறது.

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →