ஆபிரகாமால் எப்படி தன்னுடைய மகனை பலிக்கொடுக்கும் அளவிற்கு அவனுக்குள் தைரியமும், விசுவாசமும் இருந்தது? (ஆதி 22). ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் ஆபிரகாமுக்குள் கண்மூடித்தனமான நம்பிக்கை இல்லை. மாறாக அவன் விழிப்புணர்வுடையவனாய் இருந்தான். அதாவது தேவன் ஈசாக்கின் மூலமாய் தன்னுடைய சந்ததியை ஆசிர்வதிப்பார் என்கிற வாக்குத்தத்ததை தேவனிடமிருந்து அவன் பெற்றுக்கொண்டான். வாக்குத்தத்ததை கொடுத்தவர் அந்த வாக்குத்தத்ததை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்கிற அறிவும் நிச்சயமும் அவனுக்குள் இருந்தது. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே;
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்தும் எழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். (எபி 11:17-19). இந்த அறிவும், நிச்சயமும் நமக்கு இருக்கிறதா? சூழ்நிலைகள் மோசமானதாக மாறினாலும் தேவனின் வாக்குறுதி நமக்கு இருக்கிறபடியால் எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்கொள்வார் என்கிற உறுதி நமக்கு இருக்கிறதா? பவுலும் இதை தான் கூறுகிறார்.
“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” – ரோமர் 8:28.
– இந்த வசனத்தில் பவுல் கூறியது போல எல்லாம் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது, தேவன் எல்லாவற்றையும் அது, எந்த சூழ்நிலைகளாய் இருந்தாலும் கூட நன்மையாய் நடத்துவார். என்கிற அறிவு உங்களுக்குள் இருக்கிறதா? நன்றி