உங்கள் மகன் அல்லது மகள் ஒரே பாலின ஈர்ப்புக்கொண்டவர்கள் (Same-sex attraction)
என உங்களுக்கு தெரிய வந்தால் எப்படி அதை வேதத்தின் படி எதிர்கொள்வது?
ஓரினசேர்க்கை பிரட்சனைக்கான தீர்வு பாகம் -2

📅 Sep 2026 ✍ TJ Broadcast ⏱ 8 Minutes Read


நீதிமொழிகள் 10:12

பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.

நோக்கம்

இந்தக் கட்டுரையின் நோக்கம் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பதற்காக அல்ல. தேவன் ஓரினச்சேர்க்கையை வெறுக்கிறார் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் (ரோமர் 1:24–28; யூதா 7). நாம் வாழும் இந்த நவீன காலத்தில், தன்னை வெளிப்படையாக ஒரே பாலின ஈர்ப்பைக் கொண்டவர் என்றும், ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பதாகவும் பெருமையாகக் கூறும் காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட காலத்தில், சபைக்குள் இருக்கும் வாலிபர்கள்கூட இந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மையே. ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் அல்லது சபையில் இருக்கும் ஒருவர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, எப்படி அவரைச் சீர்ப்படுத்துவது? (யாக். 5:20; கலா. 6:1). என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

1. கிறிஸ்தவ பெற்றோர்களாக இந்த பிரட்சனையை எப்படி அணுகுவது? (சங்கீதம் 127:4,5)

கிறிஸ்தவ பெற்றோராக, உங்கள் பிள்ளை ஒரே பாலின ஈர்ப்பைக் கொண்டவராக மாறியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் வேதனைக்குரியதும் கடினமானதுமான சூழ்நிலை என்பது உண்மையே. ஆனால், ஒரு உண்மை என்னவென்றால், இந்தச் சூழ்நிலையை நாம் சரிசெய்ய முடியும். இதில், முதலில் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் மற்றும் செய்யக் கூடாத காரியங்கள் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

செய்ய கூடாதவைகள்:

1. உணர்ச்சி வசப்பட்டு உங்கள் பிள்ளைகளை இழந்துவிடாதீர்கள் (நீதி 17:27).

உங்கள் பிள்ளை ஒரே பாலின ஈர்ப்பைக் கொண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்போது, நீங்கள் கோபப்பட்டாலோ அவனப்படுத்தினாலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கி எழுந்தாலோ, அது உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தக்கூடும். உங்களுக்கு முன்பாக எல்லாம் சரியாக இருப்பதைப் போல உங்கள் பிள்ளை நடந்துகொள்ளலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அந்தச் செயலை உங்களுக்குத் தெரியாமல் தொடர்ந்து செய்யக்கூடும். மேலும், அந்தச் செயலுக்கு ஆதரவளிக்கும் நண்பர்கள் அல்லது வேறு நபர்கள்மீது அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கக்கூடும். எனவே, பெற்றோர்கள் கோபத்தினால் தங்கள் பிள்ளைகளைத் தங்களைவிட்டு விலகச் செய்துவிடாமல், அன்புடனும் ஞானத்துடனும் அவர்களை அணுகுவது மிகவும் அவசியம். (கொலோ 3:21)

2. பிள்ளைகளை விட்டு தூரம் போகாதீர்கள். (2 கொரி 2:6-9; கலா 5:15)

“இனிமேல் நீ என் பிள்ளை அல்ல”, “இந்த வீட்டில் உனக்கு இடமில்லை”, “நீ எங்களை அவமானப்படுத்திவிட்டாய்” போன்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் அந்த வார்த்தைகளை கோபத்தில் சில நிமிடங்களில் சொல்லிவிடலாம்; ஆனால் உங்கள் பிள்ளை அந்த வார்த்தைகளை பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கலாம். நீங்கள் இப்படி செய்வதினால். அவர்களுக்குள் கசப்பான வைராக்கியம் வரலாம் (யாக் 3:13,14). இப்படி செய்வதினால் நீங்கள் உங்களைவிட்டு உங்கள் பிள்ளைகளை தூரப்படுத்துகிறீர்கள்.

3. கேலி செய்யாதீர்கள் அல்லது கிண்டல் செய்யாதீர்கள்

அவருடைய பேச்சு, உடை, தோற்றம் அல்லது நடத்தை குறித்து கேலி செய்வதைத் தவிர்க்கவும். சீர்ப்படுத்துவது என்பதற்காக அவர்களை , அவமானப்படுத்தும் முறையைப் பயன்படுத்தாதீர்கள். (கலா 6:1)

4. உடனடியாக திருமணம் செய்து வைத்துவிட முயற்சி செய்யாதீர்கள் (எபி 13:4)

திருமணத்தை ஒரு “தீர்வு” என்று கருதி அவசரமாக முடிவு செய்வது, அந்த நபருக்கும் எதிர்கால வாழ்க்கைத்துணைக்கும் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

செய்ய வேண்டியவை:

1. தேவனிடத்தில் உதவி கேளுங்கள் (சங்கீதம் 121:1,2; சங்கீதம் 86:1-17)

கடினமான சூழ்நிலையில், தேவனிடத்தில் உதவி கேட்பது உங்களைப் பலப்படுத்தும். பவுலும் இப்படித்தான் பல மோசமான சூழ்நிலைகளில் பலமடைந்தார் (பிலி. 4:13).

2. பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை நாடுங்கள். (2 தீமோ 3:16,17).

தேவனுடைய வார்த்தையில் நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தேவையான வழிகாட்டுதலும் தீர்வும் இருக்கிறது. வேதவசனங்கள் நம்மைத் தேற்றுவதோடு மட்டுமல்லாமல், நம்மைச் சீர்படுத்தி, தேவனுக்குப் பிரியமான நற்கிரியைகளைச் செய்யத் தகுதியுள்ளவர்களாகவும் மாற்றுகின்றன.

3. தேவனுடைய நீதிக்கு நேராக உங்கள் பிள்ளைகளை வழி நடந்துங்கள் ( மத்தேயு 6:33; பிலி 3:9)

தேவனுடைய பார்வையில் தவறு என்பது தவறுதான் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குப் புரியவையுங்கள். அதற்காக, நீங்கள் தேவனுடைய நீதியின்படி வாழ்ந்து, அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். தேவனுக்குப் பயந்து வாழ்வதையும், தேவனுடைய வார்த்தையின்படி நடப்பதையும் உங்கள் பிள்ளைகள் முதலில் உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்வார்கள். (தீத்து 2:7; 1 தீமோத்தேயு 4:16)

4. உங்கள் பிள்ளைகளுக்குள் நம்பிக்கையை கட்டி எழுப்புகள். (கொலோ 1:4,6,22)

நம்பிக்கையைவிடச் சிறந்த மருந்து வேறு எதுவும் இருக்க முடியாது. தேவன்மீதான நம்பிக்கை நம் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டுவரும். ஓரினச்சேர்க்கையை ஆதரித்துப் பின்னர் அதிலிருந்து விலகியதாகக் கூறும் சிலர், தங்களுடைய மாற்றத்திற்கு கிறிஸ்துவின்மீதான நம்பிக்கையே காரணம் என்று கூறியுள்ள தகவல்கள் இணையதளங்களில் காணப்படுகின்றன.

5. உங்கள் அன்பை காண்பியுங்கள். (நீதி 10:12)

லூக்கா 15வது அதிகாரத்தில் இளைய குமாரன் சம்பவத்தில் தகப்பன் காண்பித்த அன்பு அந்த குமாரன் சீர்ப்படுவதற்கு காரணமாக இருந்தது போல நீங்கள் உங்கள் பிள்ளைகள் மீது காண்பிக்கும் அன்பு அவர்கள் சீர்ப்படுத்தும். அன்பு என்பது அவர்கள் செய்யும் தவறை ஆதரிப்பது அல்ல.

☏

மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

இந்தக் கட்டுரையைப் பற்றி மேலும் அறிய அல்லது வேதாகம அடிப்படையிலான வழிகாட்டுதல் தேவைப்பட்டால் எங்களை WhatsApp மூலம் தொடர்புகொள்ளுங்கள்.

WhatsApp மூலம் தொடர்புகொள்ளுங்கள்

பகிரவும்

📱 WhatsApp
← முந்தய கட்டுரை அடுத்த கட்டுரை →