பொதுவாக கிறிஸ்தவக் குடும்பங்களிலும், சபைகளிலும், ஸ்தானங்களிலும் பாலியல்ரீதியான தகவல்களைக் குறித்த வேதாகமக் கருத்துக்களைப் பேசுவது என்பது முற்றிலும் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது. இது சம்பந்தப்பட்ட காரியங்களைப் பேசுவது பாவம் அல்லது தேவனுக்குக் கோபத்தை உண்டாக்கக்கூடும் என பெரியவர்களும், ஏன் போதகர்களும்கூட நினைக்கின்றனர். ஆனால்,
“…பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என ஏசாயா 48:17ல் தேவன்தாமே தம்மைக் குறித்து அறிவித்திருக்கிறார். மேலும், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என 2 தீமோ 3:16,17லும் நாம் வாசிக்க முடிகிறது.
இவ்வாறாக, நமது மாம்சத்துக்குரிய மற்றும் ஆவிக்குரிய வாழ்க்கையை சரியானவிதத்தில் வாழுவதற்குத் தேவையான யாவற்றையும் தேவன் நமக்குப் போதித்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். எனவே அவர், தம்முடைய வசனத்தின் மூலம் நமக்கு போதித்திருக்கிறவைகளை ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லிக் கொள்வது தவறு என நாம் நினைக்க முடியாது. மாறாக, இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து தேவன் தமது வசனத்தின் மூலமாக என்ன சொல்லியிருக்கிறார் என ஆராய்ந்து பார்த்து, நாமும், நம்மோடிருக்கும் இளம் பிள்ளைகளும் கைக்கொண்டு நடக்க பிரயாசப்படுவதே பிரயோஜனமாயிருக்கும்.
இன்றைய நாட்களில் வளரிளம் பருவத்தினரிடையே காணப்படும் ஒருசில பாலியல்ரீதியான அறியாமைகளைக் குறித்து தேவவசனம் என்ன சொல்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
1. தான் ஆணா அல்லது பெண்ணா என தனது பாலின அடையாளத்தைக் குறித்த குழப்பம் (Gender Identity Dysphoria):
வளரிளம் பருவத்தில் இருக்கும் சில ஆண் அல்லது பெண் பிள்ளைகள் இவ்வாறான மனப்போராட்டத்தில் இருக்கின்றனர். உதாரணமாக ரவி (15 வயது) இப்படிச் சொல்கிறான்.
“நான் ஆணாக இருப்பதே எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு பெண்ணைப்போல உடையணிவது பிடித்திருக்கிறது. யாருக்கும் தெரியாம சிலநேரங்களிலே பெண்களின் உடையை அணிந்து பார்த்து சந்தோஷப்படுறேன். எப்போதுமே இப்படியிருந்த நல்லாருக்கும்னு தோணுது. ஆனா, மத்தவங்க என்ன சொல்வாங்கன்னு பயமாயிருக்கு. இது சரியா அல்லது தவறா என்று எனக்குத் தெரியவில்லை”
பிளஸ்ஸிக்கும் (14 வயது) கூட இதே போராட்டம்தான்:
“நான் பெண்ணாக இருப்பதே எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு ஆணைப்போல முடிவெட்டிக்கொள்வது பிடித்திருக்கிறது. வீட்ல சொன்னா என்னத் திட்டுறாங்க. ஏன்னு புரியல. இது சரியா அல்லது தவறா என்று எனக்குத் தெரியவில்லை”
பிறப்பால், சரீர உறுப்புக்களின் அடிப்படையில் ஆணாக அல்லது பெண்ணாகப் பிறந்திருக்கிற ஒரு குழந்தை வளர்ந்து 4 வயது முதல், அது தனது பாலின அடையாளத்தை, அதாவது தான் ஆணா அல்லது பெண்ணா என கொஞ்சம், கொஞ்சமாகப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறது. வளரிளம் பருவத்தில் ஏறக்குறைய தனது பாலின அடையாளத்தை, அதாவது தான் ஆணா அல்லது பெண்ணா என்பதைப் பற்றிய ஒரு உறுதியான தெளிவு பெரும்பாலானவர்களுக்கு வந்துவிடும். ஆனால், இன்றைக்குப் பரவலாக நாம் பார்க்கிறபடி, உருவத்தில் ஆணாக இருக்கிற பையன், பெண்களின் உடைகளை அணிய விரும்புவதும், பெண்களைப் போன்ற பாவனைகள் செய்வதும், உட்காருவது, நிற்பது, நடப்பது ஆகியவற்றில் பெண்களைப் போல இருக்கவும் செய்கிறார்கள். அதேபோல, சரீரப்பிரகாரமாக பெண்பிள்ளைகளாயிருக்கிறவர்களிலும் ஒருசிலர் வளரிளம் பருவத்தில், ஆணைப்போல மனதில் உணர்வதும், அவர்களைப் போல உடையணிதல், பாவனைகள் செய்தல்;, உட்காருவது, நிற்பது, நடப்பது ஆகியவற்றில் ஆண்களைப் போல இருக்கவும் செய்கிறார்கள். அதாவது, சரீரம் ஒன்றாகவும், தன்னைப் பற்றிய மனதின் உணர்வு வேறாகவும் இருக்கும் போராட்டம்தான், “பாலின அடையாள மனப்போராட்டம்” எனப்படுகிறது.
இப்படிப்பட்ட மனப்போராட்டம் அவர்களாகவே உண்டாக்கிக் கொண்டது அல்ல. மாறாக, அவர்களது சரீரத்திலுள்ள சுரப்பிகளால் உண்டாகும் வேதியியல் தாக்கங்களே இதற்குக் காரணம் என மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலவேளைகளில், வாழ்க்கைச் சூழ்நிலைகளும் ஒரு சிறிய அளவு இப்படிப்பட்ட மனப்போராட்டத்திற்கு காரணமாயிருக்கின்றன. எனவே, இந்த மனப்போராட்டம் என்பது ஏதோ பாவம் அல்லது குற்றம் என்று கருத முடியாது, ஆனால், இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள், சிலவேளைகளில் தங்கள் சரீரங்களை, தங்களது மன உணர்வுக்கு ஏற்றபடியாக மாற்றிக்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவது மருவத்துவரீதியாகவே ஆபத்தானது என மருத்துவத்துறை எச்சரிக்கிறது. வேதமும் இதைக் குறித்து பின்வருமாறு அறிவுறுத்தியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது. அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்” (உபா 22:5). “சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன்” (1 கொரி 7:20 – 27). இவ்வசனம் நேரடியாக இப்பிரச்சனையைப் பற்றிக் கூறாவிட்டாலும், பொதுவான ஒரு அறிவுரையை நமக்குத் தருகிறது.
நமது மனதின் உணர்வுகளுக்கு நாம் அடிமைகளாகாதபடி, தேவனுக்கு பிரியமில்லாத பாவ உணர்வுகளை ஆண்டுகொள்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும் என ஆதியிலே காயீனுக்கு எரிச்சல் என்ற உணர்வு வந்தபோது தேவன் ஆலோசனை சொல்லியிருக்கிறார். தேவனுடைய ஆலோசனையை மீறி, அவன் தனது மனதின் உணர்வின்படி நடந்ததினாலே அவனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை நாம் வேதத்திலே வாசிக்கிறோம்.
“நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்” (ஆதி 4:7).
எனவே, தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறவர்கள் இதுபோன்ற மனஉணர்வின் போராட்டங்களை வேதவசனத்தைக் கொண்டும், ஜெபத்தினாலும் கிடைக்கக்கூடிய ஆவிக்குரிய பெலத்தினாலே ஜெயிக்க பிரயாசப்பட வேண்டும். தங்களோடு இருக்கிற ஆவிக்குரிய சிந்தையுடைய பெரியவர்களிடம் இந்த மனப்போராட்டத்தைக் குறித்து ஆலோசனை பெறலாம். பெரியவர்களும், தங்களோடு இருக்கிற இளம்பிள்ளைகளிடத்தில் இதுபோன்ற வித்தியாசப்பட்ட செயல்கள் காணப்படுவதை கவனித்து, அதைக் குறித்து அவர்களைக் குற்றப்படுத்தி, பலவீனமடையச் செய்யாதபடி, தேவவசனத்தைக் கொண்டு, அவர்களுக்குப் புத்தி சொல்லி, நன்மையானதைப் பின்பற்றும்படி உற்சாகப்படுத்த வேண்டும்.
தொடரும்.....
மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
இந்தக் கட்டுரையைப் பற்றி மேலும் அறிய அல்லது வேதாகம அடிப்படையிலான வழிகாட்டுதல் தேவைப்பட்டால் எங்களை WhatsApp மூலம் தொடர்புகொள்ளுங்கள்.
☘ WhatsApp மூலம் தொடர்புகொள்ளுங்கள்