“சூரியனுக்குக் கீழே” வாழ்கிற இந்த வாழ்க்கையில், நாம் உண்மையில் யார்? இந்த கேள்வி ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வியாகும். நாம் வெறும் உணர்ச்சிகளால் நடத்தப்படும் மிருகங்களா? அல்லது தேவனுடைய வார்த்தையால் வழிநடத்தப்படும் தேவ மனிதர்களா? ஞானத்தில் சிறந்த சாலமோன், மனித வாழ்க்கையின் அர்த்தத்தை ஆராய்ந்தபோது ஒரு ஆழமான உண்மையை கூறுகிறார்:
ஏன் சாலமோன் மனிதனை மிருகத்துடன் ஒப்பிடுகிறார்? ஏனெனில், தேவனை மறந்து வாழும் மனிதன், தனது உணர்ச்சிகளால் மட்டுமே இயக்கப்படுகிறான். மிருகங்களை செயல்பட வைப்பது என்ன? பசி, தூக்கம், ஆசை, பயம், காமம் போன்ற உடல் உணர்வுகள். அவை சிந்தித்து நீதியை தேர்ந்தெடுக்காது; உணர்வுகள் எதைச் சொல்கின்றனவோ அதைப் பின்பற்றுகின்றன. இன்று பல மனிதர்களின் வாழ்க்கையும் இதேபோல இல்லையா? “எனக்கு பிடித்தது”, “எனக்கு சந்தோஷம் தருவது”, “என் ஆசை” என்பதற்காகவே பலர் வாழ்கிறார்கள். உணர்ச்சிகள் தான் அவர்களை ஆள்கின்றன. கோபம் வந்தால் கோபப்படுகிறார்கள்; ஆசை வந்தால் அதைப் பின்பற்றுகிறார்கள்; உலக இன்பமே வாழ்க்கையின் இலக்கு என நினைக்கிறார்கள்.
“மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்.” — (பிரசங்கி 3:18)
ஆனால் தேவ மனிதன் வேறுபட்டவன். தேவ மனிதன் உணர்வுகளால் அல்ல, தேவனுடைய வார்த்தையால் நடத்தப்படுகிறான். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. — (2 தீமோத்தேயு 3:16-17) மிருகத்தின் வாழ்க்கை இந்த பூமியோடு முடிகிறது. ஆனால் மனிதனுக்கு தேவன் நித்தியத்தை வைத்திருக்கிறார். மனித வாழ்க்கை சாப்பிட்டு, வேலை செய்து, மகிழ்ந்து, இறந்து போவதற்காக மட்டுமல்ல. மரணத்திற்கு பின்பும் ஒரு நித்திய நிலை இருக்கிறது — ஒன்று நித்திய ஜீவன், அல்லது நித்திய ஆக்கினை. அதனால் தான் பிரசங்கி புத்தகத்தின் முடிவில் சாலமோன் கூறுகிறார்: தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. — (பிரசங்கி 12:13) இன்று நாம் நம்மையே ஆராய்ந்து பார்க்க வேண்டும். நான் யாரால் இயக்கப்படுகிறேன்? உணர்ச்சிகளாலா? உலக ஆசைகளாலா? அல்லது தேவனுடைய சத்திய வார்த்தையாலா? இந்த உலகம் காண்பதையே நம்புகிறது. ஆனால் தேவ மனிதன் காணாத நித்தியத்தை நம்பி வாழ்கிறான். “நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.” — (கலாத்தியர் 5:5) உணர்ச்சிகளால் இழுக்கப்படும் வாழ்க்கை இறுதியில் வெறுமையையே தரும். ஆனால் தேவனுக்குப் பயந்து, அவருடைய வார்த்தையின்படி வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய், நித்திய நம்பிக்கையுள்ளதாய் இருக்கும். இன்று நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள்? மிருகமாய் உணர்வுகளால் நடத்தப்படுகிறவர்களோடு தானா? அல்லது தேவ மனிதனாய் தேவனுடைய வார்த்தையால் நடத்தப்படுகிறவர்களோடு தானா? சூரியனுக்குக் கீழே நீங்கள் யார்? மிருகமா? தேவ மனிதனா?